கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

21.03.2024 07:55:25

நாட்டை நவீன விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் பயணத்தின் போது, மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ,பி வலயங்களை விரைவாக அபிவிருத்தி செய்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

 

மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் 82 ஆவது ஜனன தின நிகழ்வு நேற்று, கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள காமினி திஸாநாயக்கவின் உருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன்,காமினி திசாநாயக்கவின் குடும்ப உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காமினி திசாநாயக்கவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காமினி திசாநாயக்கவின் கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்ததோடு, அன்னாரின் அர்ப்பணிப்பு அனைவருக்கும் முன்னுதாரணமாகும் என்று கூறினார்.

மேலும், இந்நாட்டின் நீர்ப்பாசன வரலாற்றில் தனித்துவமான மாற்றத்தை ஏற்படுத்திய, மகாவலி திட்டதை காமினி திசாநாயக்க செயற்படுத்தியிருக்காவிடின் இன்று நாடு அரிசியில் தன்னிறைவு அடைந்திருக்காது என்றும் நாட்டுக்கு அவசியமான மின்சாரத்தை பெற முடியாமல் போயிருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.