திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை வெடித்த சர்ச்சை!

31.05.2026 08:11:51

தமிழகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்படும் நிலையில் விழா மேடையில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருக்கும் போட்டோ இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. 'உலக பொதுமறை' என அழைக்கப்படும் திருக்குறளை நமக்கு தந்தவர் திருவள்ளுவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளுவரை மையப்படுத்தி சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

    

 

இதற்கு முக்கிய காரணம் திருவள்ளுவரின் உடை தான். தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட திருவள்ளுவரின் போட்டோவில் அவர் வெள்ளை நிற உடை அணிந்திருப்பார். ஒரு கையில் எழுத்தாணி, இன்னொரு கையில் ஓலைச்சுவடி வைத்திருப்பார். ஆனால் சமீபகாலமாக திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு வருகிறது. பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் திருவள்ளுவருக்கு காவி உடையில் இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பயன்படுத்தி வருவது சர்ச்சையை கிளப்பியது.

திருவள்ளுவருக்கு சாதி, மதம், மொழி போன்ற எந்தவொரு குறுகிய அடையாளமும் கிடையாது. இதனால் காவி உடை அணிவதை ஏற்காமல் திமுக உள்பட பிற கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் இன்று மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இனு்று திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்பட பலரும் பங்கேற்கின்றனர். இதற்கான விழா மேடையில் திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் போட்டோ வைக்கப்பட்டுள்ளது.

அந்த போட்டோவில் திருவள்ளுவர் காவி உடை மட்டுமின்றி நெற்றி நிறைய திருநீறு பூசியுள்ளார். கழுத்தில் ருத்ரசாட்ச மாலை அணிவித்துள்ளார். இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் போட்டோ பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஆளுநராக இருந்த ஆர்என் ரவி இதுபோன்ற போட்டோக்களை பயன்படுத்தி அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்தார். தற்போது ஆர்என் ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு பதில் கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்படியான சூழலில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்கும் திருவள்ளுவர் திருநாள் விழாவிலும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.