கெர்சான் பகுதியைப் பாதுகாக்க ரஷ்யா தீவிரம் !

29.07.2022 09:32:47

ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு கெர்சான் பகுதியை மீட்பதற்கான முயற்சிகளை உக்ரைன் முடுக்கிவிட்ட நிலையில், ரஷ்யா உக்ரைன் முழுவதும் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

 

மத்திய நகரமான க்ரோப்பிவ்னிட்ஸ்கி மீது ஏவுகணைகள் தாக்கியதில் 5பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 26பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கில் உள்ள பக்முட்டில் மூன்று பேர் இறந்தனர்.

கீவ் அருகே, இராணுவ தளத்தில் 15பேர் காயமடைந்தனர். உக்ரைனின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன.

உக்ரைன் நாட்டின் தெற்கில் ரஷ்ய துருப்புக்களை தனிமைப்படுத்த முற்படுகையில் இந்த தாக்குதல் ரஷ்ய துருப்புகளால் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்குப் பகுதி நகரான கெர்சானில் முக்கியத்துவம் வாய்ந்த அன்டோனிவ்ஸ்கி பாலத்தை உக்ரைன் படையினர் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர். இதன்மூலம் ரஷ்யப் படையினருக்கு வீரர்களையும் ஆயுதங்கள், உணவுகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டுவர முடியாது போயுள்ளது. இதனால், ரஷ்யா உக்ரைன் முழுவதும் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

எவ்வாறாயினும், கெர்சான் பகுதியைப் பாதுகாப்பதற்காக ரஷ்யா கிழக்கு உக்ரைனில் இருந்து தனது படைகளை மீண்டும் நிலைநிறுத்துகிறது என்று உக்ரைனிய இராணுவம் எச்சரித்துள்ளது.