எக்ஸ் மீதான தடையை நீக்கிய பிரேஸில்!
டுவிட்டர் என முன்னர் அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடக தளத்தின் மீதான தடையை நீக்குவதாக பிரேசில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எக்ஸ் நிறுவனம் நிறுவனம் 28.6 மில்லியன் பிரேசிலிய ரியாஸை (சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதமாக செலுத்திய பின்னர், எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிற்பகுதியில், பிரேசிலின் உயர் ஃபெடரல் நீதிமன்றம் நாட்டில் தவறான தகவல் பரவுவது குறித்த விசாரணை உத்தரவுகளுக்கு இணங்கத் தவறியதற்காக எக்ஸை இடைநீக்கம் செய்தது.
2022 பிரேசிலிய ஜனாதிபதி தேர்தல் குறித்து தவறான தகவல்களை பரப்புவதாக அரசாங்கத்தால் கருதப்படும் பல சுயவிவரங்களை தடை செய்ய மறுத்த பிறகு, எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான தளத்திற்கான அணுகல் தடை செய்யப்பட்டது.
பின்னர், ஆகஸ்ட் மாத இறுதியில் மஸ்க் நிறுவனத்தின் பிரேசிலிய ஊழியர்களை பணிநீக்கம் செய்து பிரேசிலில் உள்ள எக்ஸ் அலுவலகத்தை மூடியிருந்தார்.
எவ்வாறெனினும் தற்சமயம் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள 20 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் சேவையை மீண்டும் தொடங்குவதை உறுதிசெய்ய நீதிமன்றினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.