ஓடுதளப்பாதையில் தானியங்கி முறையில் விண்கலத்தை தரையிறக்கும் முயற்சி

08.11.2022 15:45:24

இஸ்ரோவின் புதிய முயற்சியாக, விமானங்களை போன்று ஓடுதளப்பாதையில் விண்கலத்தை தரையிறக்கும் பரிசோதனை நடைபெற உள்ளது. இதற்கு "மீண்டும் பயன்படுத்தக்கூடிய வாகனம்(ஆர்எல்வி)" என்று பெயரிடப்பட்டுள்ளது.இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில், ஓடுதளப்பாதையில் தரையிறங்கும் திறனை சோதிக்க முயற்சி நடைபெறுகிறது. ஓடுபாதை தரையிறங்கும் பரிசோதனை (ஆர்எல்வி-எல்இஎக்ஸ்) என்று அழைக்கப்படுகிறது. இந்த பரிசோதனைக்காக, ஆர்எல்வி வாகன அமைப்பு, ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டு வானில் குறிப்பிட்ட அளவு தூரம், (3-5 கி.மீ உயரம்) அடைந்தவுடன் அது ஹெலிகாப்டரில் இருந்து விடுவிக்கப்படும். பின்னர் அது ஓடுதளப்பாதையை நோக்கி, சென்சார் மூலம் தானியங்கி முறையில் பத்திரமாக தரையிறங்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் கூறுகையில், "நாங்கள் காலநிலையைப் பார்க்கிறோம். இன்னும் சீதோஷ்ண நிலை சரியில்லை. எனவே, காற்று மற்றும் பிற அமைப்புகள் சாதகமாக மாறும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்" என்றார்.