வெனிசுலா விவகாரத்தில் அரசாங்கம் கண்துடைப்பு அறிக்கை!

06.01.2026 15:16:40

வெனிசுலா குடியரசின் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு ஜனாதிபதியை கைதுசெய்துள்ள அமெரிக்காவின் ஜனநாயக விராேத செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வெனிசுலா குடியரசின் மீது அமெரிக்க நடத்திய தாக்குதல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் ஊடக சந்திப்பு 5ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

வெனிசுலா ஒரு இறையாண்மையுள்ள ஜனநாயக நாடு. ஜனநாயக நாடொன்றின் மீது அமெரிக்காவின் இந்த தாக்குதல் சர்வதேச சட்டத்தை முற்றாக இல்லாதொழித்திருக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை முற்றாக கண்டிக்கிறோம்.

அமெரிக்காவின் இந்த தாக்குதல் சம்பவம் எமக்கு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறான நடவடிக்கையை இதற்கு முன்னரும் செய்திருக்கிறார்.

என்றாலும் ஜனநாயக நாடொன்றின் மீது இவ்வாறு சர்வதேச சட்டத்தை மீறி வேறு ஒரு நாடு தாக்குதல் நடத்தி இருக்கும்போது, அந்த தாக்குதலை ஜனநாயகத்தை பாதுகாக்க விரும்பும் எந்த நாடும் அதனை அனுமதிப்பதில்லை. அதற்கு எதிராக கண்டனங்களை தெரிவிக்கின்றன.

அதன் பிரகாரம் எமது நாட்டின் ஆளும் கட்சியினாலும் ஒரு கண்ட அறிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் அவர்கள் தங்களின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தி இருக்கும். என்றாலும் ஆளும் அரசாங்கத்தின் கட்சி என்றவகையில் அரசாங்கத்தின் அறிவிப்பை பார்க்கும்போது, அது பாம்பும் மரணிக்காமல், தடியும் உடையாத வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவே காண்கிறோம்.

என்றாலும் எமது நாட்டுக்கு எதிராக, எமது நாட்டை ஆக்கிரமிக்க முற்படும்போது, அதற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்த கட்சி ஒன்று, தற்போது முற்றாக மாற்றமடைந்து, வேறுவிதமாக செயற்படுவது தொடர்பில் நாங்கள் கவலையடைகிறோம். என்றாலும் கட்சி என்றவகையில், நாங்கள் இந்த நடவடிக்கைையை வன்மையாக கண்டிக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றாக எழுந்திருக்க வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.