முதலமைச்சர் ஆசை தேவையா?!.. ராஜகுமாரன் நக்கல்!.

01.01.2026 13:52:59

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தபோதே அதை உதறிவிட்டு அரசியலுக்கு போயிருக்கிறார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2 வருடங்களாக அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஆளும் கட்சியான திமுகவை அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

விக்கிரவாண்டி, மதுரை போன்ற இடங்களில் தவெக சார்பாக பொதுக்கூட்டமும் நடந்தது. இந்த 2 கூட்டத்திலும் விஜய் பேசியது அரசியல்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் பேசிய விஜய் ‘திமுக ஒரு தீய சக்தி’ என பேசினார். இது திமுகவினரை கோபப்படுத்தியது. எனவே, அவர்களும் பதிலடி கொடுத்தார்கள்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை வாங்கி திமுகவை தோற்கடிக்க வேண்டுமென விஜய் நினைக்கிறார். ஆனால், யாருடனும் கூட்டணி அமைக்காமல் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகளை விஜய் பிரிப்பதில் எந்த பலனும் இல்லை. அது திமுக வெற்றி பெறவே உதவும் என அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில், திரைப்பட இயக்குனரும், நடிகை தேவயாணியின் கணவருமான ராஜகுமாரன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘நான் கண்டிப்பாக விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன். நான் போடலனா என் சமுதாய மக்களும் ஓட்டு போட மாட்டார்கள். என் சமுதாயம் ஓட்டு போடாமல் யாரும் இங்கே வெற்றி பெற முடியாது. விஜய்க்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.
பழைய கட்சிகாரங்க அவங்க கட்சிக்குதான் ஓட்டு போடுவாங்க.. விஜய்க்கு ஒரு தொகுதியில் பத்தாயிரம் ஓட்டு கூட கிடைக்காது. அப்புறம் எப்படி ஒரு முதலமைச்சராக முடியும்?. தேவையில்லாமல் தமிழக அரசியலில் குழப்பத்தையும், ஓட்டு சிதறலையும் மட்டும்தான் ஏற்படுத்த முடியும்.. வேறு எதுவும் செய்ய முடியாது’ என்று பேசியிருக்கிறார்.