அரசின் கருத்துகள் முரணானவை

09.12.2024 09:00:00

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ( Anura Kumara Dissanayake) மற்றும் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) ஆகியோர் 13ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் உள்ள மாகாணசபை அதிகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று முரணானதாகும் என  இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) ஊடக அமையத்தில் நேற்றையதினம் (08.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் , “தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, அண்மையில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்துக்கள் பேசு பொருளாக மாறியதுடன் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.இந்தநிலையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மாகாண சபை தொடர்பில் அவ்வாறான நிலைப்பாட்டில் இல்லை.

அத்துடன், ஜனாதிபதி 13ஆம் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் தெரிவித்ததார்.

இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று முரணானது” என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.