52 தொகுதிகளை டார்கெட் பண்ணும் பாஜக!.
2026 சட்டமன்ற தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்திக்க போகிறோம் என பல மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் முதல் முதலில் கூட்டணி அறிவித்தது அதிமுகதான். அதேநேரம் இது அதிமுக தலைமையிலான கூட்டணியா இல்லை இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்திருக்கிறதா என்கிற கேள்வியும் எழுந்தது..
பாஜகவினரை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்திருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை தங்களின் கூட்டணியில் பாஜக இணைந்திருக்கிறது என்றுதான் இதை பார்க்கிறார்கள்.ஒருபக்கம் இந்த முறை மிகவும் அதிகமான சீட்டுகளை அதிமுகவிடம் வாங்கிவிட வேண்டும் என பாஜக திட்டமிட்டிருக்கிறது.
பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் துவங்கி மாநிலத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் வரை 12 தேர்தல் பொறுப்பாளர்கள் வசமிருக்கும் 52 தொகுதிகள்தான் பாஜகவின் டார்கெட் என்கிறார்கள். ஏனெனில், அந்த தொகுதிகளில் பாஜகவின் கட்டமைப்பை வலுவாக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பூத்திலும் 5 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அந்த 52 தொகுதிகள் இல்லாமல் வாசுதேவநல்லூர், திருக்கோவிலூர், கேவி குப்பம் உள்ளிட்ட மேலும் சில தொகுதிகளையும் பாஜக குறி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துதான் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவிடம் தொகுதி பங்கீடு பற்றி பேசவிருக்கிறார் என்கிறார்கள். அதேபோல் அந்த 52 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலையும் பாஜக தயார் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது..
பாஜகவுக்கு 52 தொகுதிகளை கொடுத்துவிட்டால், அன்புமணி தலைமையிலான பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் சீட்டுகளை ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கும்போது அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.. எனவே பழனிச்சாமி என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..