ராமர் கோவில் தீர்ப்பு

21.10.2024 08:01:28

ராமர் கோவில் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான சந்திரசூட் தான் ராமர் கோவில் தீர்ப்பு அளித்தது குறித்து பேசியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடம் குறித்த பிரச்சினை தொடர்ந்து வந்த நிலையில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சேர்ந்து 1992ல் பாபர் மசூதியை இடித்தது தேசிய அளவில் பெரும் கலவரங்களை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதை தொடர்ந்து 2020ம் ஆண்டில் ராமர் கோவிலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை ரஞ்சன் கோகாய் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் தனது சொந்த ஊரான புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சந்திரசூட், தான் ராமர் கோவில் தீர்ப்பு வழங்கிய அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் “சில வழக்குகளில் ஒரு முடிவுக்கு வரவே முடியாத சூழல் இருக்கும். அப்படிதான் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி வழக்கு மூன்று மாதங்களாக என் முன் இருந்தது. அப்போது நான் தினமும் கடவுள் சிலை முன்னாள் அமர்ந்து இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லும்படி வேண்டுவேன். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் அவர் நிச்சயம் ஒரு வழியை காட்டுவார்” எனக் கூறியுள்ளார்.

புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் சில மாதங்களுக்கு முன்னதாக நீதிபதி சந்திரசூட் சென்று சாமி தரிசனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.