சிறிய மாற்றங்கள் கூட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்!

12.09.2025 08:42:15

நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருகின்றபோது அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களில் ஏற்படுகின்ற சிறிய மாற்றங்கள் கூட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எடுத்துரைத்துள்ளார்.

 

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக குழுவினர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையிலிருந்து அமெரிக்கா இறங்குமதி செய்யும் பொருட்கள் மீதான தீர்வை வரி குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவைப் பாராட்டிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் , இலங்கை இதுவரை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தையும் பாராட்டினர்.

அதேசமயம் இதுவரையிலான இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வழங்கிய ஆதரவு மற்றும் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்படவுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தும் நேற்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை என்பது மீண்டுவரும் ஒரு சிறிய பொருளாதாரத்துடன் கூடிய நாடு என்பதையும், சிறியதொரு வெளிப்புற தாக்கம் கூட இலங்கையின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் ஜனாதிபதி, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இந்த அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

அனைத்து தீர்மானங்களின் போதும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.