அதிமுகவை அப்செட் ஆக்கிய விஜய் பேச்சு!

20.12.2025 13:05:14

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு போட்டி திமுக.. திமுகவுக்கு போட்டி அதிமுக என்கிற நிலைதான் இருக்கிறது. ஆனால் தற்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் அந்த பார்வை கொஞ்சம் மாறியிருக்கிறது. 

அதுவும் பேசும் மேடைகளிலெல்லாம் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் விஜய்.

அதுவும் சமீபத்தில் ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் திமுகவை தீய சக்தி என விமர்சித்து அதிரடியாக பேசினார். இவ்வளவு கடுமையாக அவர் இதுவரை திமுகவை விமர்சனம் செய்ததில்லை. கரூர் சம்பவமும் அதைத் தொடர்ந்து தவெக கூட்டத்திற்கு போலீசார் விதிக்கும் நிபந்தனைகளும் விஜயை கோபப்படுத்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

விஜயின் பேச்சு அதிமுக வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம். திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை இதுவரை நாம்தான் வாங்கி வந்தோம்.. ஆனால் திமுகவுக்கு தவெதான் எதிரி என்பது போல விஜய் கொண்டு செல்கிறார்.. இது நமக்கு நல்லதல்ல.. திமுகவுக்கு நாம்தான் சரியான போட்டி என்பது மக்களுக்கு புரியும்படி நாம் வேலைகளை செய்ய வேண்டும்.. அதற்கான வேலைகளை பாருங்கள் என முக்கிய நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் கசிந்திருக்கிறது.

அநேகமாக இனிமேல் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டங்கள் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், அதிமுகவுக்கு கிடைக்கும் திமுக அதிருப்தி ஓட்டுகளை விஜய் பிரிப்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடன்பாடில்லை என்கிறார்கள். விஜய் தனது கூட்டணியில் இணைவார் என எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. அதோடு அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையனும் தவெகவில் போய் சேர்ந்துவிட்டார். குறிப்பாக சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி கோபி பொதுக்கூட்டத்தில் பேசியபோது வந்த கூட்டத்தை விட விஜய் கலந்துகொண்ட கூட்டத்திற்கு அதிகமான கூட்டம் வந்திருக்கிறது.  எனவே இனிமேல் அதிமுகவின் செயல்பாடுகள் திமுகவுக்கு போட்டி அதிமுகதான் என சொல்லும் வகையில் இருக்கும் என அதிமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.