புடினை சந்திக்க ரஷ்யா வந்தடைந்த ஈரான் அமைச்சர்!

27.04.2026 15:25:24

விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் ரஷ்யா வந்தடைந்தார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் வார இறுதியில் முயற்சிகள் நடந்தன. மோதலை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஓமன் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு பயணம் செய்தார். அதே சமயம் இந்த வார இறுதியில், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரின் பாகிஸ்தான் பயணத்தை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்தார்.

இதன் காரணமாக அமைதி முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கான நம்பிக்கைகள் தகர்ந்தன. இந்த சூழலில், அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) ரஷ்யாவிற்கு பயணம் செய்துள்ளார்.

விளாடிமிர் புடினிடம் (Vladimir Putin) ஆதரவு கோருவதற்காக அவர் திங்களன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்தடைந்தார்.

அவர் ஈரானிய ஊடங்களிடம், "இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஆலோசனைகளும், ஒருங்கிணைப்பும் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கவும், தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்யவும் புடினுடனான சந்திப்பு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்" என்றும் அவர் கூறியதாக அல் ஜஸீரா தெரிவித்துள்ளது.