இன்று மீண்டும் டில்லிக்குப் பறக்கிறார் ரணில்!

22.12.2024 13:26:09

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் இந்தியா செல்லவுள்ளார். இவ்வாண்டில் ஒரு மாத கால இடைவெளிக்குள் இரண்டாவது தனிப்பட்ட விஜயமாக நாளை அவர் டில்லி செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

குறிப்பாக இவ்விஜயத்தின் போது எதிர்வரும் 27ஆம் திகதி இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் உரையை ஆற்றவுள்ளார். இந்நிகழ்வு டில்லியிலுள்ள இந்திய ஹாபிடேட் சென்டர் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஒரு வார இந்திய விஜயத்தின் போது, அந்நாட்டு புராதன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடவுள்ளார். அது மாத்திரமின்றி முக்கிய இரகசிய அரசியல் சந்திப்புக்களிலும் அவர் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் பொதுத் தேர்தல் நிறைவடைந்து ஒரு வாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றிருந்தார். நவம்பர் 21 - 30 வரையான குறித்த விஜயத்தில் மத்திய பிரதேசத்திலுள்ள ஸ்ரீ சத்ய சாய் வித்யா விஹாரில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.