18 வயதுக்கு குறைவானவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை தடுக்கும், புதிய சட்டங்கள் !

28.07.2021 10:41:50

இலங்கையில் 18 வயதுக்கு குறைவானவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை தடுக்கும், புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டுவருவதற்கான திட்டங்களை ஸ்ரீலங்கா தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

18 வயதுக்கு குறைவானவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையிலான சட்டத்தை மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்ற எதிர்ப்பார்ப்பதாக, ஸ்ரீலங்கா தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமி உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா தொழில் அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வா நேற்றைய தினம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பணியகம், சட்டமா அதிபர் திணைக்களம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், நீதி அமைச்சு மற்றும் தொழில் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது இந்த திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த வருடம் நாட்டின் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டதோடு, தொழிலில் ஈடுபடுவதற்கான ஆகக் குறைந்த வயது எல்லையை 14 இலிருந்து 16ஆக மாற்றியமைத்தது. மகளிர், இளைஞர் மற்றும் சிறுவர் தொழிலாளர் சட்டத்தின் கீழ், அபாயகரமான தொழில் விதிமுறைகளை திருத்துவதற்கான இறுதி வரைவு ஏற்கனவே தனது அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு குடும்பம் பெண்ணைப் பணிக்கு அமர்த்தினால், தனிநபரின் விபரங்கள் மாவட்ட தொழிலாளர் அதிகாரியுடன் பகிரப்பட வேண்டும் என்பதோடு, முதலாளிகள் தேசிய குறைந்தபட்ச ஊதியத்திற்கு இணங்க வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் ஊடாக வீட்டுப் பணிப்பெண்கள் பயனடையும் வகையில், முக்கிய சட்டங்களில் திருத்தங்களைச் செய்யுள்ளதாக, தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆரோக்கியமான பணிச்சூழலை உறுதி செய்வதில் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பல முக்கிய திட்டங்கள் மற்றும் உள்நாட்டு வீட்டுப் பணிப் பெண்களுக்கு பணிக்கொடை கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 16 வயதிற்கும் குறைவான 45 ஆயிரம் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.