தனி வழியில் தமிழரசு கட்சி

10.01.2023 09:54:30

இலங்கைத் தமிழரசுக் கட்சி, உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் இலங்கைத் தமிழரசு கட்சி தனியே போட்டியிடுவதென்று தீர்மானித்துள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு கிடைக்கப்பெறும் ஆசனங்களின் அடிப்படையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கூட்டமைப்பை விட்டு நிரந்தரமாக பிரியவில்லை எனவும் எதிர்வரும் தேர்தலின் போது மட்டுமே தனித்து போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இருப்பினும் இந்த பிரிவு இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை தமிழரசுக்கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

மேலும் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி,  தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட் ),  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் கூட்டணி, துளசி தலைமையிலான ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து  ஒரு கூட்டமைப்பை அமைக்கவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமாருடன் பேச்சு

உடைந்ததா கூட்டமைப்பு - தனி வழியில் தமிழரசு கட்சி; கேள்விக்குறியாகுமா இனப் பிரச்சினைத் தீர்வு! | Sl Local Government Election Split Within The Tna

 

அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள பேச்சு நடத்தப்படும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.