யாழில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்

18.03.2024 08:26:00

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றால் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி பகுதியில் உள்ள இரண்டு பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 

அதன் போது, காலாவதியான பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை , வண்டுகள் மொய்த்த பழுதடைந்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. 

மீட்கப்பட்ட பொருட்களை சான்று பொருட்களாக மன்றில் முற்படுத்திய சுகாதார பரிசோதகர் அங்காடி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். 

குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை மன்றில் அழைக்கப்பட்ட போது ஒருவர் மன்றில் முன்னிலையாகத நிலையில் , மன்றில் முன்னிலையான ஒரு அங்காடி உரிமையாளருக்கு எதிராக 18 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. 

தன் மீதான குற்றச்சாட்டுக்களை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.