பிரியங்கா காந்தியை தலைவியாக ஏற்றுக் கொள்ள கர்நாடக பெண்கள் தயாராக இல்லை

16.01.2023 22:04:18

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- காங்கிரசால் ஆட்சிக்கு வரமுடியாது சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று காங்கிரசுக்கு நன்கு தெரியும். மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராகி விட்டனர். ஒரு திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்த சாத்தியமில்லை என்று தெரிந்திருந்தும், மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை காங்கிரசார் கொடுத்து வருகின்றனர்.

அதிகாரத்திற்கு வந்தால் தானே, அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற சாத்தியமாக முடியும். ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், காங்கிரசார் கொடுக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். ஏனெனில் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது சுலபம். அதனை நிறைவேற்றுவது என்பது மிகவும் கடினம். பெண்களுக்காக தனியாக திட்டங்களை வகுத்து, வாக்குறுதிகளை அளித்து வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியால் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வர முடியாது.

பெண்கள் தயாராக இல்லை ஏற்கனவே கர்நாடக மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க தயாராகி விட்டனர். பிரியங்கா காந்தி பெங்களூருவுக்கு வந்துள்ளார். தான் தலைவி என்ற பெயரில் பெங்களூருவில் கூட்டத்தில் அவர் பங்கேற்றிருக்கிறார். அவர் பங்கேற்று இருக்கும் கூட்டத்திற்கு வைத்திருக்கும் தலைப்பே வேடிக்கையாக உள்ளது. 'நான் தலைவி' என்று புகைப்படத்தை வைத்து கொண்டு, தன்னை தானே பிரியங்கா காந்தி அறிவித்து கொண்டு இருக்கிறார்.

இதன்மூலம் காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இல்லை என்பது தெளிவாகிறது. நான் தலைவி என்று பிரியங்கா காந்தி தனக்கு தானே அறிவித்து கொண்டாலும், அவரை தலைவியாக ஏற்றுக் கொள்ள கர்நாடக மாநில பெண்கள் தயாராக இல்லை. பா.ஜனதா ஆட்சியில் ஸ்ரீசக்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பல்வேறு உதவிகளை அரசு வழங்கி வருகிறது. ஸ்ரீசக்தி திட்டத்திற்கு கர்நாடக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரசு மீது குற்றச்சாட்டு கூறுவது மட்டுமே காங்கிரசின் வேலையாகும். எந்த ஒரு திட்டம் சிறப்பாக இருந்தாலும், அதனை காங்கிரசார் பாராட்டுவதில்லை.