தமிழ் மக்களின் அபிலாசைகள் வென்றெடுக்க சிறந்த பொறிமுறை !

20.05.2022 10:08:00

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஈ.பி.டி.பி கட்சி தெரிவித்துள்ளது.

எனவே அதற்காக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு கட்சி சாராத அரசாங்கம் சிறந்த பொறிமுறை எனவும் ஆகவே அதனை சந்தர்ப்பமாகவும் பயன்படுத்த வேண்டும் எனவும் அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு கட்சி சாராத அரசாங்கம், சிறந்த பொறிமுறையாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி சாராத அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடிதத்திலேயே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகத்தினால் மேற்படி கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கட்சி சாராத அரசாங்கத்தினை அமைக்கும் பிரதமரின் முயற்சிகளுக்கு ஈ.பி.டி.பி. கட்சி பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பினையேற்று, சவால்மிக்க தருணத்தில் பிரதமர் பதவியை பொறுப்யேற்றுக் கொண்டமைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளும் நோக்கில் பல்வேறு நாடுகளுடனும் சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர்பாடல்களுக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்