தாமரை சின்னத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

20.03.2024 08:22:10

தேசிய மலரான தாமரை சின்னத்தை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

 

 

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான ரமேஷ் என்பவர், தேசிய மலரான தாமரையை பாஜக பயன்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

 

அந்த மனுவில், தேசிய மலரான தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி என்றும் அது நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது ஆகும் என்றும் கூறியிருந்தார்.  எனவே, பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் அவர் வலியுறுத்தி இருந்தார்.

 

 

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

 

இந்நிலையில் தாமரை சின்னத்தை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.