
பிரதாப்போத்தன் உடலுக்கு அஞ்சலி!
நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் பிரதாப்போத்தன். இவரின் உடலுக்கு நடிகர் கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழ் சினிமாவில் முக்கியமான கலைஞர்களுள் ஒருவர் பிரதாப்போத்தன் (70 ) நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1978-ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாளப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1979-ஆம் ஆண்டு வெளியான தகர என்ற மலையாளப்படத்திற்காக பிலிம்பேர் விருதினைப் பெற்றார். அதே ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
இவர் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருந்தாலும் இளைமைக்கோலம், மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள் போன்ற தமிழ் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நெருக்கமானார்.
1985-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதாப் போத்தன் இந்த படத்திறக்காக சிறந்தஅறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருதினை பெற்றார். ஜீவா, வெற்றி விழா, மைடியர் மார்த்தாண்டன் போன்ற படங்களை இயக்கிய இவர் ஆத்மா படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார்.
அதேசமயம் கதாசிரியர் சௌபா எழுதிய சீவலப்பேரி பாண்டி கதையை திரைப்படமாக எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். மலையாளத்தில் இவர் இயக்கிய யாத்ரா மொழி படத்தில் சிவாஜி கணேசனும், மோகன்லாலும் சேர்ந்து நடித்தனர். சில நாட்களுக்கு முன்பு சுந்தர்.சி. இயக்கத்தில் காபி வித் காதல் படத்திற்காக கொடைக்கானல் சென்று வந்தார். நடிகர் பிரதாப்போத்தன் சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் வாழ்ந்து வந்தார்.
இதையடுத்து இன்று (15.07.2022) காலை சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வேலையாட்கள் வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் படுக்கையில் இருந்திருக்கிறார்.