எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன’
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கின்றது. அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடைபெறும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் சண்டை பிடித்துக்கொண்டது போதும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கருத்து வேறுபாடுகளை களைந்து தேசியக் கொள்கைகளுக்காக ஒன்றுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரையொன்றை முன்வைத்தார்.
இப்போதும் அது பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சட்ட மூலங்களில் தேசிய கொள்கை குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக ஆசியாவிலேயே மிகவும் சக்திவாய்ந்த நிதிக் கட்டுப்பாட்டு சட்ட மூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளன என்றார்.