போர் முடிவுக்கு வருமா?

28.02.2022 09:45:08

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஆக்ரோ‌ஷமாக தாக்கி வருகிறது. இன்று 5-வது நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான முதல் நாள் தாக்குதலுக்கு பிறகு ரஷியா பேச்சுவார்த்தைக்கு உக்ரைனை அழைத்தது.

ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ரஷியா தெரிவித்ததை உக்ரைன் ஏற்கவில்லை. இதனால் ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது.

உக்ரைனில் போரை ஆக்ரோ‌ஷமாக நடத்தி வந்தாலும் மறுபுறம் ரஷியா பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பெலாரஸ் நாட்டில் உள்ள ஹோமெல் நகருக்கு ரஷிய தூதுக்குழு சென்றுள்ளது. அங்கு உக்ரைன் தூதுக்குழு வருகைக்காக காத்திருப்பதாக ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்தது.

அதேபோல ரஷிய அதிபர் புதினும் பெலாரசில் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தூதுக்குழு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ‘பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ரஷியா கூறுவது ஏற்கத்தக்கதல்ல.

ரஷியாவின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு பெலாரஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதை ஏற்க முடியாது. வேறு இடங்களில் எங்கு வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தார்.

பின்னர் சில மணிநேரங்களுக்கு பிறகு பெலாரசில் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்தது. இதனை நேற்று இரவு உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் குழுவை பெலாரசுக்கு அனுப்புவதை உக்ரைன் அரசு உறுதி செய்தது.

இதையடுத்து பெலாரஸ் நாட்டில் இன்று ரஷியா- உக்ரைன் நாடுகளின் குழுக்களின் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பெலாரஸ் நாட்டு அரசு செய்துள்ளது. இதில் இருநாடுகளின் குழுவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள்.

இரு நாடுகளும் அவரவர் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்து விவாதிக்கிறார்கள். உக்ரைனில் ரஷியாவின் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் தூதுக்குழு வலியுறுத்துகிறது.

அதேபோல் நேட்டோ படையில் உக்ரைன் சேரக் கூடாது என்ற ரஷியாவின் முக்கிய கோரிக்கை குறித்து தெரிவிக்கப்படுகிறது. உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள உக்ரைன்- ரஷியா போர் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.