அமீரின் 'உயிர் தமிழுக்கு' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு
போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகி இருக்கும் இயக்குநரும், நடிகருமான அமீர் நடிப்பில் தயாராகி இருக்கும் 'உயிர் தமிழுக்கு' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'உயிர் தமிழுக்கு' எனும் திரைப்படத்தில் அமீர், சாந்தினி, ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, ராஜசிம்மன், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்ரமணியம் சிவா, ராஜ் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். பொலிட்டிக்கல் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் ஆதம் பாவா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியிருக்கும் அமீர், அது தொடர்பான காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில் அவர் நடிப்பில் உருவான திரைப்படம் வெளியாவது.. அவருக்கு சாதகமான நிலையை உருவாக்குமா? அல்லது பாதகமாக மாறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே தருணத்தில் தற்போது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால்.. இந்த தருணத்தில் அரசியலை மையப்படுத்திய 'உயிர் தமிழுக்கு' எனும் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்றும் அவதானிக்கப்படுகிறது.