விதார்த் நடிக்கும் 'அஞ்சாமை'
'யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அஞ்சாமை' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அஞ்சாமை' எனும் திரைப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராகவ் பிரசாத் மற்றும் கலாச்சரண் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நுழைவுத் தேர்வு விடயம் குறித்து விரிவாக பேசும் இந்த திரைப்படத்தை திருச்சித்திரம் படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் வைத்தியர் எம். திருநாவுக்கரசு தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் புகைப்படத்தின் பின்னணியில் மருத்துவ நுழைவுத் தேர்வு குறித்த விடயங்கள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்திய அரசு மருத்துவம் படிப்பதற்காக அறிமுகப்படுத்திய நீட் எனும் நுழைவுத் தேர்வு தொடர்பில் மாணவர்கள் - பெற்றோர்கள் - பாடசாலை நிறுவனங்கள்- கல்வியாளர்கள் இடையே பெரும் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சொல்ல இயலாத துயரங்களை எதிர்கொண்டிருக்கும் மாணவ மாணவிகளின் துயரங்களை முன்னிறுத்தி இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது '' என்றார்.