ட்ரம்புக்கு மறைமுக பதிலடி.

09.03.2025 11:03:52

ட்ரம்புக்கு மறைமுக பதிலடியாக கனடா மீது சீனா கடுமையான வரிகளை விதித்துள்ளது. இதனால், கனடா-சீனா வர்த்தக மோதல் மேலும் தீவிரமாகியுள்ளது. சீனா, கனடாவின் கேனோலா எண்ணெய், இறைச்சி மற்றும் கடலுணவுகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சீனாவின் மின்சார வாகனங்கள், எஃகு மற்றும் அலுமினியத்திற்கு கனடா அதிக வரி விதித்தது. இதற்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய வரிகளை அறிவித்துள்ளது.

   

இந்த புதிய வரிகள் மார்ச் 20 முதல் அமுலுக்கு வரும் என்றும், இது கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவின் வர்த்தக அழுத்தங்களுக்கு ஒத்துழைக்கக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கை என்றும் சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பைடன் நிர்வாகங்கள் தொடர்ந்து கனடாவும் மெக்சிகோவும் சீனாவின் மலிவான பொருட்களை வட அமெரிக்க சந்தையில் அனுமதிக்கக்கூடாது என்று அழுத்தம் கொடுத்து வருகின்றன.

கனடாவின் மிகப்பாரிய ஏற்றுமதி பொருளான canola எண்ணெய் இப்போது சீனாவில் 100% வரிக்கு உட்படும்.

கனடா கடந்த ஆண்டு 3.29 பில்லியன் டொலர் மதிப்புள்ள கனோலா எண்ணெய்யை சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சீனாவிற்கான கனடாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 13.4% ஆகும்.

இதையடுத்து, கனேடிய பன்றி இறைச்சி மற்றும் கடலுணவுகளுக்கு சீனா 25 சதவீதம் வரி விதித்துள்ளது.

மொத்தத்தில், சீனா கனடாவுக்கு ஒரு பாரிய சந்தையாக இருப்பதால், இந்த நடவடிக்கை கனடாவின் பொருளாதாரத்துக்கு கடுமையான தாக்கம் ஏற்படுத்தலாம்.

2019-ல் மென்க் வான்சூ விவகாரத்தின் போது, சீனா கனடாவின் கேனோலாவுக்கு வரி விதித்ததை நினைவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ வியாபார ஒப்பந்தங்களில் சீனாவை ஒதுக்க முயல்வதால், வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

கனடா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ மறுமொழியும் வழங்கவில்லை. இந்த வரிகள், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளை மேலும் கடுமையாக்கலாம்.