விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்

28.11.2021 10:00:00

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, ஐரோப்பாவின் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து  நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையொன்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கை அடிப்படையாகக் கொண்ட விடுதலைப்புலிகளின் அரசியல் தரப்பினர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டையே, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும், சட்ட செலவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவுகள் ஆகியவற்றை செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தினால் முதன் முதலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு,  தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

அத்துடன், குறித்த அமைப்பின் ஆயுத போராட்டம்  தோற்கடிக்கப்பட்டாலும் அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பு மற்றும் மீள் உருவாக்கத் திறன்  ஆகியன இன்னும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம்  சுட்டிக்காட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில், விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் மீண்டும் சேர்த்தது.

இந்நிலையிலேயே அதனை நீக்குமாறு கோரி மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சைவழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளதோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நகல் இவ்வாறு கூறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் படி, 2001/931 பொதுநிலையின் முதலாவது சரத்தின் படி “பயங்கரவாதச் செயல்” என்பது தேசிய சட்டங்களிற்கமைய நாட்டையோ அல்லது சர்வதேச நிறுவனத்தையோ பாதிக்கும் குற்றமாக வரையறுக்கப்பட்ட கீழ்வருவனவற்றைக் குறிக்கின்றது.

(i) மக்களை கடுமையாக அச்சுறுத்துவது, அல்லது
(ii) எந்தவொரு செயலையும் செய்யுமாறோ அல்லது செய்யாமல் இருக்குமாறோ அரசாங்கம் அல்லது சர்வதேச நிறுவனத்தை முறையற்ற முறையில் கட்டாயப்படுத்துதல், அல்லது
(iii) ஒரு நாட்டின் அல்லது ஒரு சர்வதேச அமைப்பின் அடிப்படை அரசியல், அரசியலமைப்பு, பொருளாதார அல்லது சமூக கட்டமைப்புகளை மோசமாக சீர்குலைத்தல் அல்லது அழித்தல்:
(a) மரணம் சம்பவிக்கக்கூடிய வகையிலான தாக்குதல்கள்;
(b) உடலியல் ரீதியிலான தாக்குதல்கள்;

(c) கடத்துதல் அல்லது பணயக்கைதியாக வைத்துக்கொள்ளல்;

(ஈ) ஒரு அரசு அல்லது பொது வசதி, போக்குவரத்து அமைப்பு, தகவல் கட்டமைப்பு அடங்கலான உட்கட்டமைப்பு வசதி, ஒரு தகவல் அமைப்பு, நிலையான தளம், பொது இடம் அல்லது தனியார் சொத்து, மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது விளைவிக்கக்கூடிய அல்லது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியவை

(e) விமானம், கப்பல்கள் அல்லது பொது அல்லது சரக்கு போக்குவரத்துக்கான பிற வழிகளை பறிமுதல் செய்தல்;

(f) ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது அணு, உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், கொள்வனவு செய்தல், விநியோகித்தல், அவை குறித்து ஆய்வுசெய்தல் அல்லது அவற்றை மேம்படுத்தல்
(g) மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான பொருட்களை வெளியிடுதல் அல்லது தீ, வெடிப்புகள் அல்லது வெள்ளங்களை ஏற்படுத்துதல்;

(h) நீர், மின்சாரம் அல்லது பிற அடிப்படை இயற்கை வளங்களின் விநியோகத்தில் குறுக்கிடுதல் அல்லது சீர்குலைத்து மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்;

(i) (a) முதல் (h) வரை பட்டியலிடப்பட்டுள்ள செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யப்போவதாக அச்சுறுத்தல்;

(j) ஒரு பயங்கரவாதக் குழுவை வழிநடத்துதல்;

(k) ஒரு பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்பது, குழுவின் குற்றச் செயல்களுக்கு பங்களிக்கும் என்ற உண்மையை அறிந்தும் தகவல் அல்லது பொருள் வளங்களை வழங்குதல் அல்லது அதன் நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல்
பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவால் அடையாளம் காணப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படலாம். பயங்கரவாதப் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்து தொடர்ச்சியான கால இடைவெளியில், அதாவது குறைந்தது 6 மாதங்களிற்கு ஒரு தடவை, மதிப்பாய்வு செய்யப்பட்டு அவர்கள் அந்தப் பட்டியலில் தொடர்ந்து வைக்கப்படுவது தொடர்பில் உறுதிசெய்யப்படும்.
இதில், விண்ணப்பதாரர்கள் ஐரோப்பிய அரசியல் உட்பிரிவு என்று கூறிக்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

2019.01.08 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடரும் முடிவை கவுன்சில் எடுத்ததுடன் அதற்கான காரணங்களையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகருக்கு அனுப்பியது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன,
– விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்குத் தனிநாடு கோரிப் போராடிய ஒரு குழுவாகும்.

– பிரித்தானியாவின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொள்வதாகக் கூறி அதனைப் பயங்கரவாத அமைப்பாக பிரித்தானியாவின் உள்துறைத் திணைக்களம் 2001 இல் முடிவுசெய்தது.

– பிரான்ஸ் பாரிசிலுள்ள பிராந்திய நீதிமன்றமானது பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அதிலுள்ள உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தி, மிரட்டி, வன்முறையைப் பயன்படுத்தி கையெழுத்து, வாக்குறுதி, பணம் மற்றும் சொத்துகளை பெற்றுக்கொள்வதன் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என 2009- 11- 23 அன்று தீர்ப்பளித்தது.

– விடுதலைப் புலிகள் அமைப்பானது இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அதனது சர்வதேச நிதிசேகரிக்கும் செயற்பாடுகளும் மீளக்கட்டமைக்கும் அதனது ஆற்றல்களும் அப்படியே இருக்கின்றது எனக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பை நிதிமுடக்கப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஏதுக்கள் இல்லை என முடிவுசெய்தது.

– விடுதலைப் புலிகள் அமைப்பானது அதனது இராணுவ வல்லமையையும் வலையமைப்பையும் எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளத்தக்க விதத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு உள்துறைச் செயலகமானது விடுதலைப் புலிகளைத் தடைப்பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதென 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவுசெய்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிதிமுடக்கல் பட்டியலில் தொடரப்போவதாக 2019-06- 27 அன்று கவுன்சிலானது கடிதம் மூலம் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெடிபொருட்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் கொடிகள் என்பவற்றை எடுத்துச் சென்ற நபர்களை சிறிலங்கா பொலீசார் கைதுசெய்ததைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டுக் கமிசனில் முறையிடப்பட்டது. இதை அடிப்படையாகக்கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்த செல்வரட்ணம் தவராஜ் என்பவர் விடுதலைப் புலிகள் சார்பாக ஆஜராகுவதற்கு அந்த அமைப்பால் அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய அரசியல் உபபிரிவினால் அந்த அமைப்பு சார்பாக ஆஜராக அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் எந்தவொரு சான்றுமில்லை எனவும் எதிர்த்தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்து நிதிமுடக்கப் பட்டியலில் சேர்த்தமைக்கான அடிப்படைகள் காலாவதியாகிவிட்டன என்று தொடர்ந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றமானது தவராஜ் வழக்குத் தொடுத்த அடிப்படை விவாதங்கள் அனைத்தையும் நிராகரித்ததோடு, வழக்கிற்கான அனைத்துச் செலவுகளையும் அவரே பொறுப்பேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

https://curia.europa.eu/juris/document/document_print.jsf?docid=250005&text&dir&doclang=EN&part=1&occ=first&mode=lst&pageIndex=0&cid=1340620&fbclid=IwAR0khH1_suUzyzG6p5hQ5Vf_6GS0zgP86EEz30QrbGFH7k_2nQflqKvaA84