ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம் !

26.08.2021 10:56:28

ஸ்ரீலங்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட ஒரு இனவெறியாளர் என ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்திய அரசை ஏமாற்றுவதற்கு சிங்கள அரசாங்கம் மேற்கொள்ளும் இன்னொரு ‘சூழ்ச்சி நடவடிக்கையாகவே இந்த நியமனத்தை கருத வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோட்டா - மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் மிலிந்த மொரகொடவை  ஸ்ரீலங்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமித்துள்ளது. ராஜபக்ஸ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டியுள்ள நிலையில், ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தனும் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மிலிந்த மொரகொட உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்று இந்தியா வந்துள்ளதை நினைத்து ஈழ மக்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும் கவிஞர் காசி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈழத்தில் சிங்கள குடியேற்றத்தை மேம்படுத்தி இலங்கையை முழுச் சிங்கள நாடாக மாற்றுவதன் ஊடாக இலங்கை உள் விவகாரங்களில் தலையிடும் உரிமையை இந்தியா இழந்து விடும் என்பதே ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டம் எனவும் கவிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன், செய்து கொள்ளும் வணிக உடன்படிக்கைகள் அல்ல தமிழீழ மக்களுடன் செய்து கொள்ளும் தமிழீழத்தின் 'தாயகப் பாதுகாப்பு உடன்படிக்கையே" இந்துமாக் கடல் பேரெல்லையில் இந்தியாவின் இருப்பை உறுதி செய்யும் என்பதை இந்திய அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.