இடைநிறுத்தியது தேர்தல்கள் ஆணைக்குழு

21.10.2024 08:11:04

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை மாகாண ஆளுநர்களின் மேற்பார்வையில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வழங்கிய உத்தரவை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

அந்தத் திட்டங்களைத் தொடங்குவது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் அந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.

 

இதற்குக் காரணம் மாகாண ஆளுநர் பதவி என்பது அரசியல் நியமனம். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் செயலிழந்துள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் செயற்பாடுகளை மாகாண ஆளுநர்களின் இணைத்தலைமையின் கீழ் தொடர்வதற்கான பொறிமுறையை தயார் செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ்.  குமாநாயக்க இதற்கு முன்னர் பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பாக, மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை நடத்துவதற்கும், மேற்பார்வையிடுவதற்கும், மீளாய்வு செய்வதற்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்ததோடு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் செயலற்ற தன்மையினால் அந்தத் திட்டங்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.