பயங்கரவாத தடைச் சட்ட விவகாரம்- ஐ.நா ஆணையாளரின் கோரிக்கையை நிராகரித்த ஸ்ரீலங்கா!

06.03.2021 10:28:42

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லெட் விடுத்த கோரிக்கையை ஸ்ரீலங்கா அரசு நிராகரித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், அதன் சில உட்பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா, மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சிகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் 82 முன்னாள் உறுப்பினர்களை, விடுவிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய முயற்சிப்பது தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.