
உக்ரைனின் உளவு கப்பலை மூழ்கடித்த ரஷ்யா!
உக்ரைனின் சிம்பெரோபோல் உளவுக்கப்பலை ரஷ்ய ட்ரோன் தாக்குதல் மூலம் அழித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைன் சிம்பெரோபோல்(Simferopol) உளவு கப்பல் கடலில் மூழ்கியதாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையானது ஒடேசா பகுதியின் டான்யூப் நதி டெல்டாவில் மேற்கொள்ளப்பட்டதாகவும் ரஷ்ய அமைச்சகம் அறிவித்துள்ளது. |
சிம்பெரோபோல் கப்பல் தாக்கப்பட்டதை உக்ரைன் தரப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த பணியாளர் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன், பலர் காயமடைந்து இருப்பதாக உக்ரைன் கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் கடற்படை கப்பலை முதல் முறையாக ரஷ்யா கடற்படை ட்ரோன் கொண்டு தாக்கி இருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனமான RT மற்றும் TASS தெரிவித்துள்ளது. சிம்பெரோபோல் கப்பல் உக்ரைன் கடற்படையால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஆகும். 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த லகுனா ரக கப்பல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உக்ரைன் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. வார் கோன்சோ டெலிகிராம் சேனலின் தகவல்படி, 2014ம் ஆண்டுக்கு பிறகு உக்ரைனால் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் சிம்பெரோபோல் ஆகும். |