அமெரிக்காவில் நெரிசலில் பலியான இந்திய மாணவி உடல் அடக்கம்
இசைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்திய வம்சாவளி மாணவியின் உடல் அமெரிக்காவின் ஹூஸ்டனில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் பிரபல 'ராப்' பாடகர் டிராவிஸ் ஸ்காட்டின் இசைத் திருவிழா நடந்தது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அந்த விழாவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பார்தி ஷஹானி, 22, என்ற மாணவி படுகாயமடைந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், கடந்த 11ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், ஷஹானியின் உடலுக்கு நேற்று இறுதிச் சடங்குகள் நடந்தன. ஹூஸ்டன் நகரில் நடந்த இந்த நிகழ்வில், அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் பங்கேற்றனர்.
இறுதிச் சடங்கின்போது பேசிய ஷஹானியின் தாய் கூறியதாவது: என் மகள் ஷஹானி, அனைவரிடம் அன்பாகவும், பாசமாகவும் பழகக்கூடியவர். தேவைப்படுவோருக்கு உதவி செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். சில ஆண்டுகளுக்கு முன் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முடிவு செய்து ஷஹானி அதற்கான ஆவணத்திலும் கையெழுத்திட்டார்.
இறந்த பின்னும், ஷஹானி தன் உடல் உறுப்புகள் வாயிலாக பிறருக்கு உதவ இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். பின் அனைவரும் கண்ணீர் மல்க விடை கொடுக்கவே, ஷஹானியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.