தி.மு.க. கோட்டையாக சென்னையை மாற்றி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக சென்னையில் அதிக வார்டுகளை கைப்பற்றி மீண்டும் தி.மு.க. கோட்டையாக சென்னையை மாற்றி உள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவதற்கு முழு காரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 9 மாத மக்கள் பணியாகும். அவர் இரவு-பகல் என்று பாராமல் மக்கள் பணியாற்றி வருகிறார்.
கொரோனா காலத்தில் சவாலான நேரத்தில் ஆட்சி பொறுப்பேற்று மிக திறம்பட செயல்பட்டதால் மக்கள் மனதில் நிறைந்துள்ளார். கொரோனா 3-வது அலையிலும், சென்னை மழை- வெள்ள பாதிப்பிலும் தனது கடமையை முழுமையாக நிறைவேற்றி உள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதோடு, சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்டி வருவதால் தலைநகர் மக்கள் மட்டு மின்றி தமிழக மக்களும் அவரை முழுமையாக நம்பி வாக்களித்து இருக்கிறார்கள்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எண்ணங்களுக்கு வர்ணம் கொடுக்கும் வகையில் தி.மு.க. உறுப்பினர்களின் உள்ளாட்சி பணி அமையும்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞரிடமே சவால் விட்டார். அவரது சவாலை ஏற்று தி.மு.க. தொண்டர் மூலம் அவரை தோற்கடித்தார்.
ஒரு மாவட்ட செயலாளரை ஒரு வட்ட செயலாளர் தோற்கடித்த வரலாறு தி.மு.க.வுக்குதான் உள்ளது. அம்பத்தூரில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அலெக்சாண்டர் மாவட்ட செயலாளராக உள்ளார்.
ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றியவர். அவர் ஒரு சாதாரண தி.மு.க. தொண்டரிடம் தோல்வியை தழுவி உள்ளார். முதல்- அமைச்சரின் மக்கள் பணியை ஏற்று வாக்களித்ததன் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளது.