’ஐ.தே.க. கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை’

08.04.2024 07:52:22

ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை. அதன் பொருளாதாரக் கொள்கையை மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட குழுவே தற்போது கையாள்கின்றது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சி இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாத்தவன் நான். ஜே.ஆர் ஜயவர்தன, ஆர், பிரேமதாச, டி.பி. விஜேதுங்க, இவர்கள் அனைவருடனும் நாங்கள் பணியாற்றினோம்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி என்று தங்களை அழைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த உரிமையும் இல்லை. இன்று எமக்கு பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. நாட்டு நலனுக்காக நாம் இணைந்து செயற்பட வேண்டும். இன்று அரசியல் போக்கு மாறிவிட்டது என்றார்.