முடிவுக்கு வரும் முத்தப் போட்டி; ஏன் தெரியுமா?
உலகின் மிக நீண்ட முத்தப் போட்டி கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தாய்லாந்தைச் சேர்ந்த ஏக்கச்சாய் லக்ஷனா திரானரத் தம்பதியினர் சுமார் 58 மணி நேரம் முத்தமிட்டு உலக சாதனை படைத்திருந்தனர்.
இதுவே உலகின் மிக நீண்ட முத்தமென கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த பிரிவில் எந்த போட்டிகளும் நடைபெறாது என கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இப்போட்டிகள், போட்டியாளர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கும் என்பதாலேயே இந்த முடிவுக்கு வந்ததாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இப் போட்டியின் விதிமுறைகள் மிகக் கடுமையாக இருப்பதால் போட்டியாளர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே இனியும் இந்தப் போட்டியை நடத்துவதற்கு சாத்தியமில்லை எனவும் கின்னஸ் அமைப்பு விளக்கமளித்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் புதிய முத்த சாதனைப் போட்டிக்கான விதிகளில் மாற்றம் கொண்டு வர கின்னஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி போட்டியின் போது குறிப்பிட்ட அளவு இடைவெளியில் 5 நிமிடம் ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஓய்வு நேரத்தில் போட்டியாளர்கள் உண்பது, தூங்குவது, இயற்கை உபாதைகள் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் முத்தத்தில் இருந்து போட்டியாளர்கள் தங்கள் உதடுகளையும் பிரித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இதனால் போட்டியாளர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் வலி ஆகியவற்றில் இருந்து போட்டியாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.