'போலியான வீரத்தை ஸ்டாலின் காட்டியுள்ளார்'.
|
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க..ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு' என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்த எக்ஸ் வலைத்தள பதிவில், 'தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையே ஆகும்.
|
|
மத்திய அரசின் இந்த ஆலோசனை, பயிர் பல்வகைப்படுத்துதலை (Crop Diversification) ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்குப் பார்வையாகும். இதன் மூலம், உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின், தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.அரசியலமைப்புச் சட்டப்படி உயர் பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல. தமிழக விவசாயிகள் தங்கள் கவலைகளையே வாக்குகளுக்காக ஆயுதமாக்கும் அரசை அல்ல, மாறாக தங்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசையே எதிர்பார்க்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு சோர்வின்றித் தொடர்ந்து பணியாற்றும். இத்தகைய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்சனைகளால் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்' என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்நது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'நிர்மலா சீதாராமன் அவர்களே, "நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்" எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது. கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள். தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?' என முதல்வர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தலைமை செயலாளருக்கு அனுப்பியிருந்த கடிதத்தை தற்போது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். செலவின துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை அனைத்து மாநிலங்களுக்கும் வெளியிடுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. அதைத் தவறாகப் புரிந்துகொள்ள அவர் முடிவு செய்துள்ளார். அது தனது வாதத்தை வலுப்படுத்தும் என்றால், அவரே அதை வெளியிட்டிருப்பார். ஆனால் இல்லை, அவர் அப்படிச் செய்யவில்லை. ஒரு சவாலை விடுப்பதன் மூலம் அவர் போலியான வீரத்தைக் காட்டியுள்ளார். அந்தக் கடிதத்திற்கான இணைப்பை வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தேசிய நலனில் சிறிதளவேனும் அக்கறை கொண்ட எந்தவொரு முதலமைச்சரும் இதை வரவேற்பார். மாறாக, முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு ஆக்கப்பூர்வமான ஆலோசனையை, புனையப்பட்ட ஒரு குறையாக திரித்துக்கூறத் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் திமுகவைப் பொறுத்தவரை, இந்தியாவின் தேவைகள் ஒரு கவலையல்ல, அவை அரசியல் ஆதாயம் தேடுவதற்கான ஒரு வாய்ப்பாகும்' என தெரிவித்து அந்த கடிதத்தை நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார். |