தாய்லாந்து, ஜப்பான், தென்னாபிரிக்காவிற்கு இலங்கையில் முதலிட வாய்ப்பு – கோட்டாபய

18.11.2021 05:42:04

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஜப்பான் மற்றும் தாய்லாந்துத் தூதுவர்களும் இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சாற்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதற்கமைய இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவராக பொஜ் ஹான்பொல், ஜப்பான் தூதுவராக ஹிடேகி மிஸுகொஷி மற்றும் இலங்கைக்கான தென்னாபிரிக்கா  உயர்ஸ்தானிகராக சன்டில் எட்வின் சல்க் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் இலங்கை மற்றும் தமது நாடுகளுக்கு இடையிலான நீண்டகால உறவை, புதிய துறைகளின் ஊடாக மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

கொவிட் தொற்றுப் பரவலின் ஆரம்பம் முதல் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், தடுப்பூசி ஏற்றல் தொடர்பாகப் பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றம் மற்றும் கொவிட் தொற்று நிலைமையுடன் பொருளாதார முகாமைத்துவத்தின்போது முகங்கொடுக்க நேரிட்டுள்ள சவால்கள் பற்றி, ஜனாதிபதி புதிய இராஜதந்திரிகளிடம் தெளிவுபடுத்தினார். 

அங்கு எல்லா நாடுகளும் ஒன்றிணைந்துச் செயற்படுதல் மற்றும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொவிட் தொற்றுப் பரவலைத் தடுத்தல் மற்றும் தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில், ஜனாதிபதிக்கு தூதுவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். 

அரசாங்கம் புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கும் விதத்தைத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, இந்நாட்டின் முதலீட்டு வாய்ப்புகளுக்கு, அந்நாடுகளின் முதலீட்டாளர்களுக்குச் சந்தர்ப்பம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சேதனப் பசளைப் பயன்பாட்டின் மூலம் பசுமை விவசாயத்தை உருவாக்குதல் மற்றும் இந்நாட்டு சக்திவலுத் தேவைக்கான அதிக பங்களிப்பை, மீள்பிறப்பாக்கச் சக்திமூலங்களில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை, ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

அதற்கு அவசியமான தொழில்நுட்பம் மற்றும் திறன் வசதிகளை எமது நாட்டுக்கு வழங்க ஒத்துழைப்பு வழங்குமாறும், ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

தான் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்தபோது தென்னாபிரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயங்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகப் பணிபுரிந்த காலத்தில் ஜெய்க்கா நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்புகளின்போது மிக நெருக்கமாகச் செயற்பட முடிந்தது என்றும்  குறிப்பிட்டார்.

இலங்கையின் சந்தை மற்றும் விவசாயத்துறையின் முன்னேற்றத்துக்குப் பங்களிப்பு வழங்குவதாக, இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர் பொஜ் ஹான்பொல் மற்றும் இலங்கைக்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் சன்டில் எட்வின் ஆகியோர் குறிப்பிட்டனர். 

ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையில் 70 வருடகாலத் இராஜதந்திர உறவுகள் காணப்படுவதாகத் தெரிவித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிஸுகொஷி, அந்த உறவுகளை உறுதியுடன் முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறினார்.