3 வாரங்கள் ஆகியும் தாய்லாந்து இளவரசிக்கு சுயநினைவு திரும்பவில்லை

10.01.2023 22:26:44

தாய்லாந்து நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் இளவரசி பஜ்ரகித்தியபா. 44 வயதான இவர் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் பாங்காக்கில் தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார்.

உடனடியாக அவர் பாங்காக்கில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பஜ்ரகித்தியபா இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இளவரசியின் உடல் நிலை குறித்து அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இளவரசிக்கு 3 வாரங்கள் ஆகியும் சுயநினைவு திரும்பவில்லை என்றும், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஆதரிக்கும் உபகரணங்களை பயன்படுத்தி டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.