தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் குறித்து இன்னும் முடிவு இல்லை !
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்திற்காக பொலிஸ் திணைக்களம் காத்திருக்கிறது.
தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பதவிக்காலம் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை உறுதியாகவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பிற்காக காத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி விக்ரமசிங்கவினால் நான்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்ட சி.டி. விக்ரமரத்தன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கடந்த ஆண்டு நவம்பரில் பதில் பொலிஸ் மா அதிபராக கடமையேற்றார்.
தேசபந்து தென்னகோனின் நியமனத்தை அரசியலமைப்பு சபை அங்கீகரித்த போதிலும், 2022 மே 9 அன்று காலி முகத்திடல் போராட்ட தளத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களின் பின்னர் அவருக்கு எதிராக கடுமையான எதிர்ப்புக்கள் அதிகரித்தன.
இதன்படி, அவரது தவிக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட பலர் மனுக்களை தாக்கல் செய்த நிலையில் அவை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு விசாரணைக்கும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.