துப்பாக்கி சூட்டில் இரு அவுஸ்திரேலிய பொலிஸார் மரணம்!

26.08.2025 08:10:26

விக்டோரியா – ஆல்பைன் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமப்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

 

இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு அதிகாரி காயமடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெல்போர்னில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள போரேபன்காவில் உள்ளூர் நேரப்படி, செவ்வாயன்று (26) காலை 10.55 மணியளவில் உதவி கோரிய அவசர அழைப்பிற்கு பொலிஸார் பதிலளித்தனர்.

அழைப்புக்கு பதிலளிக்கும் விதமாக பொலிஸார் குறித்த இடத்துக்கு சென்ற போது இந்த துப்பாக்கிப் பிரயோகம் அவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை அடுத்து சுமார் 1000 பேர் வசிக்கும் சிறிய நகரத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு அதிகாரிகள் துப்பறியும் அதிகாரிகள் என்று நம்பப்படுகிறது.

மூன்றாவது அதிகாரியின் காயங்களின் தீவிரம் இன்னும் தெரியவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர், குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்களுடன் தப்பி ஓடியதாக நம்பப்படுகிறது.

 

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உலகின் மிகக் கடுமையான துப்பாக்கி விதிமுறைகளைக் கொண்ட அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒப்பீட்டளவில் அரிதானமையும் குறிப்பிடத்தக்கது.