“அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு.

18.03.2026 14:01:17

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் உள்ளிட்ட பலர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. கிரி ராஜன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், தங்கமணி, கே.சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆர். காமராஜ், கே.பி. அன்பழகன், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே பல்வேறு ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இந்த ஊழல் வழக்குகளின் அடிப்படையில் முறைகேடாகப் பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தைக் கண்டறியச் சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்த போதுமான முகாந்திரம் உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு ஏற்கனவே பல புகார்கள் அனுப்பப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நீதிமன்றம் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் எஸ். வேலுமணி அமைச்சராக இருந்தபோது சாலைகள் அமைப்பதில் முறைகேடு நடைபெற்றுள்ளது தொடர்பான வழக்கு, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது, எல்.இ.டி. பல்புகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதற்காக வழக்குகள் லஞ்ச ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், காமராஜ், சி. விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணைகள் நிலுவையில் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீதும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.