ரணிலின் குடியுரிமையை ரத்துச் செய்ய வேண்டும்!

10.03.2025 08:30:10

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும், அவரது குடியுரிமையை இரத்துச் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆகவே அரசாங்கம் பட்டலந்த அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் செயற்படுகிறது என்பதை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலை ஒட்டுமொத்த மக்களும் பார்க்க வேண்டும். காலவோட்டத்தில் அரசியல் அதிகாரத்துடன் மறைக்கப்பட்ட பல விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.

கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு ரணில் விக்கிரமசிங்க சிரித்துக் கொண்டே பதிலளித்தார் இதனூடாக மக்கள் தொடர்பில் அவர் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளார் என்பது வெளிப்படுகிறது.

அல்ஜசீரா ஊடகவியலாளர் பட்டலந்த அறிக்கை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வியெழுப்பிய போது, 'அவ்வாறான அறிக்கை எங்குள்ளது என்று' ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கிரார்.

ஊடகவியலாளர் அறிக்கையை காண்பித்த போது 'அந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதா' என்று ரணில் மீண்டும் பதிலளிக்கிறார்.

அவ்வாறாயின் பட்டலந்த விவகாரம் அரச நிறுவன கட்டமைப்புக்குள் இதுவரையில் பிரவேசிப்பக்கப்படவில்லை ரணில் விக்கிரமசிங்க கருதுகிறார். பட்டலந்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு அப்போதைய ஜனாதிபதியால் விசேட குழு நியமிக்கப்பட்டது. அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

இருப்பினும் அறிக்கை இதுவரை காலமும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு, ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய தேவை இருந்தது அதனால் அவர் பட்டலந்த அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கவில்லை.

பட்டலந்த விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரிதான வாய்ப்பு கிடைத்துள்ளது.

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு நியாயத்தை வழங்கும் வாய்ப்பு அரசாங்கத்துக்கு காலவோட்டத்துக்கு அமைய கிடைக்கப்பெற்றுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடு எவ்வாறானதாக அமையும் என்பதை அவதானித்துள்ளோம்.

1997 ஆம் ஆண்டு பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும், அவரது குடியுரிமையை இரத்துச் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆகவே அரசாங்கம் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.