ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்

08.03.2024 08:50:10

ஏடன் வளைகுடா பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான வணிகக் கப்பலில் இருந்து இந்தியாவினால் மீட்கப்பட்ட 21 பேரில் இலங்கையர்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏடன் வளைகுடா பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால், அங்கு பயணித்த வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகனைத் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும், நால்வர் காயமடைந்த நிலையில், இவர்களின் இலங்கையர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தாவால் குறித்த கப்பலில் இருந்து நேற்று 21 பணியாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் இரண்டு இலங்கையர்களும் உள்ளடங்குவதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

மீட்கப்பட்ட இலங்கை பிரஜைகளில் ஒருவர் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கயான் விக்ரமசூரிய உறுதிப்படுத்தியுள்ளார். கப்பலில் இருந்த 21 பணியாளர்கள் மற்றும் மூன்று ஆயுதமேந்திய காவலர்கள், இந்திய போர்க்கப்பல் மூலம் ஆப்பிரிக்காவின் ஹார்ன் ஆஃப் ஜிபூட்டியில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஏடன் துறைமுகத்தில் இருந்து சுமார் 50 கடல்மைல் தொலைவில் பயணித்த கிரேக்கத்தால் இயக்கப்படும் ‘ட்ரூ கான்ஃபிடன்ஸ்’ எனும் கப்பல் மீதே, ஈரானுடன் இணைந்த போராளிகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர்.