ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டொயோட்டா!

13.03.2024 08:14:12

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தனது ஊழியர்களுக்கு கணிசமான அளவு ஊதிய உயர்வினை வழங்க ஜப்பானின் டொயோட்டா மோட்டார் நிறுவனம் தீர்மானித்துள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

 

ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான டொயோட்டா, பனசோனிக் மற்றும் நிசான் நிறுவனங்களும் தங்கள் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக இவ்வாறு சம்பளத்தை அதிகரிக்க முழுமையாக ஒப்புக் கொண்டுள்ளன.

அதன்படி, கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள டொயோட்டா, ஊழியர்களின் மாதச் சம்பளத்தை 28,440 யென்களால் அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும், நிப்பொன் ஸ்டீல் நிறுவனமும் தனது ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.
அதன்படி, சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு இடையிலான சம்பளம் தொடர்பான வருடாந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜப்பானில் பல துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இம்முறை அதிக சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஜப்பான் நாட்டில் தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் நல்ல புரிதல் நிலை இருப்பதனால் பேச்சுவார்த்தைகள் எப்போதும் நெருக்கடியின்றி முடிவடைவதாகக் கூறப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.