
சென்னைக்கு இன்று 386-வது பிறந்த நாள்!
தமிழக தலைநகர் சென்னை இன்று (ஓகஸ்ட் 22) தனது 386-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
1639-ம் ஆண்டு ஓகஸ்ட் 22 அன்று, சென்னப்ப நாயக்கரின் மகன் வெங்கடப்ப நாயக்கரிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனிக்காக பிரான்சிஸ்டே என்பவர் புனித ஜார்ஜ் கோட்டை அமைந்த நிலத்தை வாங்கினார். அப்போது மதராஸ் பட்டணம் என அழைக்கப்பட்ட இந்நகரம், பின்னர் சென்னப் பட்டணம் என மாற்றப்பட்டு காலப்போக்கில் ‘சென்னை’ என்ற பெயருடன் அறியப்படுகிறது.
இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகவும், உலகின் 31-வது பெரிய நகரமாகவும் விளங்கும் சென்னை, தற்போது ஒரு கோடியே அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும் தாய்நகரமாக திகழும் சென்னைக்கு, ‘அன்னை நகரம்’ என்ற புகழும் உண்டு.
ஆனால், சென்னையின் பாரம்பரியத்தை காக்கும் பொறுப்பில் சவால்களும் நீடிக்கின்றன. ஒருகாலத்தில் தெளிந்த நீராக ஓடிய கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை இன்று கழிவுநீர் கால்வாய்களாக மாறியுள்ளன. மேலும், பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக நகரம் முடங்கும் நிலையும் தொடர்கிறது. இதற்குக் காரணமாக வடிகால் அமைப்பின் குறைபாடுகள் குறிப்பிடப்படுகின்றன.
சென்னை தினத்தை முன்னிட்டு, இந்நகரம் தந்த வாழ்வைப் போல, நகரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.