துனிசிய அதிபரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த ஆயிரக்கணக்கான மக்கள்

15.11.2021 09:05:57

துனிசிய அதிபர் கைஸ் சையத் அரசியல் அமைப்பு திருத்தம் மூலம் தனது அதிகாரங்களை அதிகரித்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 25ம் தேதி துனிசியா பிரதமரை பதவி நீக்கம் செய்த அதிகார கைஸ் சையத், அந்நாட்டின் நாடாளுமன்றத்தை முடக்கினார். 

கடந்த செப்டம்பரில் தனக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் வகையில் அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டார். கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சுகாதார நெருக்கடிகளில் இருந்து துனிசியாவை மீட்கும் விதமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கைஸ் சையத் தனது செயல்களை நியாயப்படுத்தினார்.

இதனை ஏற்க மறுத்த மக்கள், துனிசியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் துனிசில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான மக்கள் அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர். அனைத்து அதிகாரங்களை தன் வசப்படுத்தும் சதி செயலலில் அதிபர் கைஸ் சையத் ஈடுபட்டுள்ளதாக துனிசிய மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்திய மக்கள் அமைப்பினர், தவறினால் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.