வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

24.07.2024 07:46:38

மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி, இன்று டெல்லியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக  பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு போதியளவு நிதி ஒதுக்கப்படாதமையைக் கண்டித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

2024 – 2025 நிதியாண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை நேற்று மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்திய வரலாற்றில் அதிக முறை தொடர்ந்து வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

குறித்த வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு துறை,வேளாண் துறை மற்றும் ரயில்வே துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாஜக மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற மாநிலங்களுக்கு எந்த ஒரு திட்டமும், நிதியும் ஒதுக்கப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் நிதி ஒதுக்கீடு குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்  இந்தியா கூட்டணிக் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இன்று இந்தியா கூட்டணி எம்பிகள் அனைவரும்  நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.