இந்திய தூதரக அதிகாரிகளின் குற்றவியல் நடவடிக்கைகள்:
கனடாவில் கடந்த பல ஆண்டுகளாக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய தூதர அதிகாரிகள் மீது கனேடிய பொலிசார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இரு நாடுகளில் இருந்தும் மூத்த இராஜாங்க அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட சில மணிநேரங்களில், கனேடிய பொலிசார் இந்திய அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளனர். அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய RCMP தலைவர், தங்களிடம் போதுமான தரவுகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன், இந்திய அரசாங்கம் சார்பில் கனடாவில் உள்ள தூதரக அதிகாரிகள் மிரட்டி பணம் பறித்தல், மிரட்டுதல், வற்புறுத்தல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார். |
கமிஷனர் மைக் துஹேம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கனடாவில் செயல்படும் இந்திய தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட தங்கள் உத்தியோகபூர்வ பதவிகளைப் பயன்படுத்தி வருவதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய ரசாங்கத்திற்காக தரவுகளை திரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கனடாவில் இந்திய அதிகாரிகள் நடத்தும் இரகசிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் தரப்பில் உத்தியோகப்பூர்வமாக பேசப்படுவது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியத்தில் வைத்து சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசாங்கத்திற்கு பங்கிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியது இரு நாடுகளின் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திங்களன்று பேசிய பிரதமர் ட்ரூடோ, கனேடிய மண்ணில் கனேடிய குடிமக்களை அச்சுறுத்தும் அல்லது கொலை செய்யும் வெளிநாட்டு அரசாங்கத்தின் ஈடுபாட்டை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். கனேடியர்களைத் தாக்க தங்கள் தூதரக அதிகாரிகள் மற்றும் குற்றவாளிகளைப் பயன்படுத்த இந்தியா முடிவு செய்தது மிகப்பெரிய தவறு என்றும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். கனேடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly தெரிவிக்கையில், நிஜ்ஜர் வழக்கில் தனிப்பட்ட 6 பேர்களுக்கு தொடர்பிருப்பதாக வலுவான ஆதாரங்கள் RCMP வசம் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, இந்த வழக்கில் ஒத்துழைக்க இந்தியாவிடம் கோரியதாகவும், ஆனால் அவர்கள் மறுத்துள்ளதாகவே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நிஜ்ஜார் கொலையில் இந்திய உயர் ஆணையர் சஞ்சய் குமார் வர்மா சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் ஆதாரம் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கனேடிய அரசாங்கம் கடந்த வாரம் இந்தியாவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்தது என்றும், ஆனால் நரேந்திர மோடி அரசாங்கத்தால் அவை மறுக்கப்பட்டது என்றும் தகவல் கசிந்துள்ளது |