ஏழு பேர் விடுதலை விவகாரம் -தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

06.07.2021 08:28:37

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாகி சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பில் குடியரசுத் தலைவரை நிர்ப்பந்திக்க முடியாது என தமிழகத்தின் புதியசட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலையை ஆய்வு செய்த பின்னர் , செய்தியாளர்களை சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை தற்போது குடியரசுத் தலைவர் கையில் உள்ள நிலையில், அவரை நிர்ப்பந்திக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆட்சியில் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் பன்வாரிலால் உரிய முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக அமைச்சர் குற்றம்சாட்டியார்.