ஜெர்மனி, அமெரிக்காவை தொடர்ந்து ஐநா விமர்சனம்
ஐநா: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து, அமெரிக்கா, ஜெர்மனி நாடுகளை தொடர்ந்து ஐ.நா விமர்சனம் செய்துள்ளது. இந்தியாவில் மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என நம்புகிறோம் என ஐநா பொது செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபானே துஜாரிக் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார்.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் மக்களிடையே மோடி அரசுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தி உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த முதல்வர் அரசியல் ரீதியாக பழி வாங்கும் வகையில் கைது செய்யப்பட்டது உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கெஜ்ரிவால் வழக்கு நியாயமாக நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் இந்த கருத்துக்கு ஒன்றிய அரசு கண்டனத்தைப் பதிவு செய்தது.
டெல்லியிலுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு அமெரிக்க தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனாவை நேரில் அழைத்து இந்த கண்டனத்தை அரசு பதிவு செய்தது. ஏற்கனவே, முதல்வர் கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனி தூதரக அதிகாரி ஜார்ஜ் என்ஸ்வெய்லர் கருத்து தெரிவித்திருந்தார். காங்கிரஸ் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டுள்ளன. 2018-19ம் ஆண்டுக்கான வருமான வரியைத் திரும்பச் செலுத்துவதில் 45 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதால் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதுடன் ரூ.210 கோடி அபராதம் செலுத்த காங்கிரசுக்கு வருமானவரித்துறை உத்தரவிட்டது.
தற்போது, ரூ.1800 கோடி அபராதம் செலுத்துவதற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரஸ்சின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபானே துஜாரிக் நேற்று முன்தினம் பேட்டியளித்தார். அப்போது, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது, காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பிய நிருபர்கள் இந்தியாவில் அரசியல் நிச்சயமற்றத்தன்மை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பற்றி ஸ்டீபானேயிடம் கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘‘இந்தியாவில், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான், அனைவரும் சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் வாக்களிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார். ஜெர்மனி, அமெரிக்காவை தொடர்ந்து ஐ.நாவும் கெஜ்ரிவால் கைது விவகாரம் பற்றி இந்தியாவை விமர்சித்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.
* டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கப்பட்டது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
* ஜெர்மனி, அமெரிக்கா நாடுகள் கெஜ்ரிவால் கைதை விமர்சித்துள்ளன.
* தற்போது ஐ.நா அமைப்பும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
* இந்திய மக்கள் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.